சேலம், ஆக.13: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டதை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டார்.

காவிரி-கோதாவரி ஆறுகளின் இணைப்பை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் கூறினார்.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்து வைத்த பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:-

தமிழக அரசு விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. அதிமுக ஆட்சியில் தான் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு தான்.

வரும் நீரை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீ திறப்பு அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். ஏழுமலையானின் அருளால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து தற்போது நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும் உள்ளாட்சிகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குட்டைகளும் தூர்வாரப்படும். காவிரியில் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும்.

காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றும்; அதனால் கூடுதல் நீர் தமிழகத்துக்கு கிடைக்கும். மேட்டூர் அணை நீரால் என்னுடைய நிலமும் பாசனம் பெறுவதால் மகிழ்ச்சி. விவசாயிகளுக்கு போதுமான விதை. நெல், உரம் போன்றவை இருப்பு வைக்கப்பட்டு உரிய நேரத்தில் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்படும்.

மேலும் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களுக்கு இன்று முதல் 137 நாட்களுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும்.

இதனால் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

மேலும் காவிரி ஆற்றிலிருந்து 155 திட்டங்களின் மூலம் 1700 மில்லியன் லிட்டர் தண்ணீர் எட்டு மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.