சென்னை,ஆக.13: நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.
வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர் விருதுகளையும் வழங்குகிறார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினவிழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுகிறார்.

சென்னை ஜார்ஜ் புனிதக் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வருவார்கள். கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்திறங்குவார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்பார்.

தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. கே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார். பின்னர் 9 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு முதலமைச்சர் வருவார். அங்கிருந்தபடி மூவர்ண தேசியக் கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைப்பார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்படும்.

மேலும், போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள். பின்னர் சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி நிகழ்த்துவார்.
அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதல்-அமைச்சர் வழங்குவார். இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும்.

பின்னர் விருது பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்வார். அதைத் தொடர்ந்து அங்கு போடப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவார்.

இந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் காண்பதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.