திருவண்ணாமலை, ஆக.13: திருவண்ணாமலை அருகே இன்று பகல் 12 மணியளவில் காரும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் உடல் நசுங்கி பலியாயினர்.

பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே போல் திருவண்ணா மலையில் இருந்து சரக்கு லாரி ஒன்று கர்நாடக மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தது. ஒட்டக்குடிசல் பகுதியில் உள்ள அய்யம்பாளையத்தில் என்ற இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதில் காரில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கார் முழுவதுமாக சிதைந்ததால் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் ஜேசிபி எந்திரம் மூலம் உடல்கள் மீட்கப்பட்டன. அப்போது ஒருவரின் கால் துண்டாகவும், மற்றொரு பெண்ணின் உடல் சிதைந்தும் காணப்பட்டது. இதுகுறித்து அய்யம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வருமாறு:-

ஸ்ரீநாத் ரெட்டி, பரத், சந்தீப், சந்திரம்மாள், ஷாலினி இவர்கள் அனைவரும் பெங்களூர் கோரமங்களா, கே.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர்.