சென்னை, ஆக.13: அத்திவரதர் தரிசனத்தை மேலும் ஒரு மண்டல காலத்திற்கு நீட்டிக்க கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனத்திற்காக கூட்டம் அலை மோதுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். இதுவரை சுமார் 70 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

48 நாட்கள் வரை தரிசனம் என்பது முடிய இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி, அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இன்னும் ஏராளமானோர் பார்க்க ஆர்வமாக உள்ளனர். எனவே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் ஒரு மண்டலம், (அதாவது 48 நாட்கள் வரை) நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.

இதை கேட்ட நீதிபதி, மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரிப்பதாக தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் மீன்சுருட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி (வயது 75) என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், அன்னிய படையெடுப்பின் போது, உடையார்பாளையத்தில் அத்திவரதரை பாதுகாத்து வைத்திருந்த வரலாறு இருக்கிறது. அந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அத்திவரதரை இதுநாள் வரை பார்த்து தரிசிக்க முடியாமல் இருப்பதால், அத்திவரதர் தரிசனத்தை மேலும் ஒரு மண்டலம் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.