சாவிலும் இணை பிரியாத சகோதரிகள் கேரள மாநிலத்தில் சோக சம்பவம்

TOP-6 இந்தியா

திருவனந்தபுரம், ஆக.13: கேரள மாநிலத்தில் இரண்டு சகோதரிகள் கட்டிப்பிடித்தபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விக்டர், தொம்மா ஆகிய இருவரும் கேரள மாநிலம் மல்லபுரம் மாவட்டத்தில் காவல்புரா என்ற இடத்தில் மலை உச்சியில் வீடுகட்டி வசித்து வந்தனர். அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்கள்.

கேரளாவில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்களின் வீடு அடித்துச் செல்லப்பட்டது. இரண்டு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உயிர்தப்பி விட்டனர்.

அனகா (வயது 4), அலீனா (வயது 8) ஆகிய இருவரும் அக்கா, தங்கைகள். இருவரும் ஒரே கட்டிலில் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்து தூங்குவது வழக்கம். அந்த அளவுக்கு பாசமாக இருந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட போது அலீனா தன் தங்கையை காப்பாற்றுவதற்காக கட்டிப்பிடித்தபடியே இருந்தார். இருவரும் மண் சரிவுக்குள் சிக்கிக் கொண்டனர்.

மீட்பு படையினர் சென்று பார்த்த போது இருவரும் கட்டிப்பிடித்தபடி உயிரிழந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். அவர்கள் இருவரின் உடல்களும் மல்லபுரம் தேவாலயத்தில் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் அனைவரும் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தனித்தனி சவப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு ஒரே கல்லறையில் புதைக்கப்பட்டனர்.