மும்பை, ஆக.13:  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வந்த 2,000 விண்ணப்பங்களில் இருந்து 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சி யாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதனையடுத்து, புதிய பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30-ம் தேதியுடன் முடிந்தது. தலைமை பயிற்சியாளர் தேர்வு வரும் 16-ம் தேதி நடக்கிறது. பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்த 2,000 பேரில் இருந்து 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன், தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன், இலங்கையின் ஜெயவர்த்தனே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் அடங்குவர். இவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என்றும், அதனடிப்படையில். இவர்களில் இருந்து ஒருவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.