லார்ட்ஸ், ஆக.13:  2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார்.

எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் கூட்டம் லார்ட்ஸில் நேற்று நடந்தது. இதில், கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வது மேம்படுத்துவது குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக, கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் கூறுகையில், நாங்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கும்படி ஐசிசியுடன் கேட்டுக்கொண்டுள்ளோம். இதற்கு ஐசிசி-யின் புதிய செயல் அதிகாரி மனு சாஹனி இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியதாக மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) அண்மையில் தேசிய ஊக்குமருந்து தடை அமைப்பின் விதிமுறைகளுக்குள் வந்தது. இது, ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுமாறு கோரிக்கை வைப்பதற்கு இது முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. ஒரு விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற வேண்டும் எனில், அந்த விளையாட்டு தொடர்பாக உள்ள அமைப்புகள் அனைத்தும் உலக ஊக்கமருந்து தடை அமைப்பின் விதிகளுக்குள் வரவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.