சேலம், ஆக.14: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை கடந்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து வினாடிக்கு 62,225 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் இன்று அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் விடுவிக்கப்பட்டு வருகிறது. 120 அடி வரை கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக தற்போது உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பிவிட்டதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது.