திருத்தணி, ஆக. 14: திமுகவினருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். திருத்தணிக்கு வருகை தந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இஸ்லாமியர்களை மூளை சலவை செய்து வேலூர் நாடாளு மன்றத்தில் தி.மு.க வெற்றி பெற்றது. காஷ்மீர் சட்ட திருத்தம் ஒரு மாதம் கழித்து நடந்திருந்தால் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றிருக்கும்.

370பிரிவு தடை செய்ததின் மூலம் அந்த மக்களுக்கு சகல உரிமைகளும் கிடைக்க உள்ளது. தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் அந்த மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள். அதை மீட்டு பாதுகாக்க பிரதமர் எடுத்த நடவடிக்கையை எல்லோரும் பாராட்டுகிறார்கள். . தி.மு.கவினரிடம் பண்பில்லை, தேசபக்தியும் இல்லை. சந்திரபாபு நாயுடு, மாயாவதி போன்ற தலைவர்கள் ஆதரவு தந்துள்ளனர். நாட்டின் இறையாண்மை தேசத்தின் அக்கறை காட்டுகிற அரசு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.

லடாக் பகுதி மக்கள் 70 ஆண்டு காலமாக இழந்திருந்த சுதந்திரம் உறவு, நட்புகள் புதுப்பித்து ஒருவரோடு ஒருவர் கூடி வாழும் வாழ்க்கை உருவாகியுள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தி.மு.க தன்னிச்சையாக விட்டு கொடுத்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க எம்.பிக்கள் தமிழகத்தில் ஒரு பேச்சு, டெல்லியில் பிஜேபிக்கு ஜால்ரா என நாடகம் நடத்துகிறார்கள். மத்திய அரசு திட்டம் நமக்கு லாபகரமாய் இருந்தால்தான் இங்கு நல்லாட்சி நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.