காஞ்சிபுரம், ஆக. 14:ஆதி அத்திவரதரை 44 நாளில் 93லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் ஒருகோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி மாத கருடசேவையையொட்டி நாளை மாலை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ அத்தி வரதர் கடந்த 44 நாட்களாக தரிசனம் அளித்து வருகிறார்.

இன்று 45 ஆம் நாளில் இளம் ரோஸ் வண்ண பட்டாடை அணிந்து ராஜா மகுடம் தரித்தபடி பல்வேறு மலர்களால் மாலைகளை சூடி கொண்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். ஸ்ரீ அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
நேற்று 44 வது நாளில் நள்ளிரவு 2 மணி வரை 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சுமார் 4 மணி நேரமாக 3 கிமீ தூரத்தில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுவரை 44 நாட்களில் 92 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் அத்தி வரதரை ஒரு கோடி பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை 2 மணியுடன் விஐபி தரிசனம் முற்றிலுமாக நிறைவடைகிறது. நாளை ஆடி கருடசேவை யொட்டி மாலை 5 மணி வரை தரிசனம் ரத்துச்செய்யப்படும்.அப்போது அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 நாட்களே தரிசனம் செய்ய முடியும் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்து கொண்டே போகிறது. மேலும் வரும் 17ம்தேதியன்று அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் மீண்டும் வைக்கப்பட உள்ளதால் அந்த இடத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.