சென்னை, ஆக.14:இந்தியாவை வல்லரசாகவும், தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் ஆக்குவதற்கு இந்த சுதந்திரதின நாளில் உறுதியேற்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து, விடுதலை பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் அவர்கள் தலைமையில் அகிம்சை முறையில் பல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, ஆங்கிலேயர்களின் அடிமைத் தளையிலிருந்து நமது தாய் திருநாட்டிற்கு விடுதலை பெற்று தந்தனர். அத்தகைய வீரத் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் நன்னாள், இச்சுதந்திர தின திருநாளாகும். தன்னலமற்ற தியாகிகள் அரும்பாடுபட்டு போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை போற்றிப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை போற்றி பெருமைப்படுத்தும் வகையில், விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 13,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது;

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, ஆகியோரது வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் பேரனின் மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம்,

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், தியாகி சுந்தரலிங்கனார் மணிமண்டபம், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் நினைவு மண்டபம், என சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவு மண்டபங்களை நிறுவி சிறப்பித்தல்; சுதந்திர போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்தல்; முக்கிய இடங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சிலைகளை நிறுவுதல், அவர்களின் பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் விழாக்கள் நடத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இந்த இனிய நன்னாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நம் இந்தியத் திருநாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம். மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,