சென்னை, ஆக.14: ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய 500 விரைவு பஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.154 கோடி செலவில் 500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் புதிய பேருந்துகளின் வடிவமைப்புகளை உள்ளே சென்றும் முதல்வர் பார்த்தார். பேருந்துகளில் உள்ள நவீன வசதிகளை பார்த்து பாராட்டு தெரிவித்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235 பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. சேலத்துக்கு 60, விழுப்புரத்துக்கு 18, மதுரைக்கு 14, கும்பகோணத்துக்கு 25, கோவைக்கு 16, நெல்லைக்கு 14 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கழிவறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பஸ் பின்னோக்கி வருவதை அறியவும், பயணிகளின் இறங்கும் இடத்தை அறிவிக்கவும், ஒலி எச்சரிக்கை கருவி வசதி உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கொண்டு வரும் ஊன்றுகோலை பாதுகாப்புக்காக வைக்கவும் வசதி உள்ளது. மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் சுற்றுலா போக்குவரத்து கழக புதிய பேருந்துகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி சீனிவாசன், தலைமை செயலாளர் சண்முகம், போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.