13 ஆற்றுப்பாலங்கள்: முதல்வர் திறந்தார்

சென்னை

சென்னை, ஆக.14: திருவொற்றியூர் மண்டலம் கத்திவாக்கத்தில் நிறைவு பெற்றுள்ள பாதாள சாக்கடை திட்டம், பல்வேறு மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 13 ஆற்றுப்பாலங்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (14.8.2019) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் 6 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் மின்விளக்கு வசதிகளுடன் கூடிய செயற்கை இழை ஓடுதளப் பாதையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

மேலும், 2 கோடியே 65 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம், பொருந்தலாற்றின்குறுக்கே 5 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

மேலும், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் 51 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 ஆற்றுப்பாலங்கள், ரெயில்வே கடவில் கட்டப்பட்டுள்ள ஒரு சாலை மேம்பாலம் மற்றும் ஒரு சாலை கீழ்பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டம், திருவொற்றியூர் மண்டலம், கத்திவாக்கத்தில் 86 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்கள். மேலும், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 36 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.