சென்னை, ஆக.14: நாட்டின் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா பேருரையாற்றுகிறார்.

இதனையொட்டி, சென்னை கோட்டை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கோட்டை முழுவதும், நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர்கள் தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஏ.அருண் ஆகியோரின் அறிவுரையின்பேரில், காவல் இணை கமிஷனர்கள் நேரடி மேற்பார்வையில், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் என மொத்தம் 12,000 போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை விமானநிலையம், ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கம், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் முழுவதும் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து மாற்றம்: சென்னை கோட்டையில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மேலும், போர் நினைவுச்சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.