சென்னை, ஆக.14: சைதாப்பேட்டையில் மாநகராட்சி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவரது சகோதரி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சைதாப்பேட்டை ஜோதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா (வயது 34). இவர், சென்னை மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கணவர் இல்லை. சைதாப்பேட்டையில் 4 வீடுகள் சொந்தமாக உள்ளன. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை மகாபலிபுரத்தில் உள்ள சகோதரி தேவிக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், 11-ம் தேதி இரவு ஜெயா தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக, சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மேற்பார்வையில், சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி ஜெயாவின் சகோதரி தேவி, அவரது உறவினர் எத்திராஜ் (வயது 41), அவரது நண்பர் சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தேவி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ஜெயா 2-வது திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்ததால், எதிர்வரும் காலங்களில் எங்களுக்கு ஜெயாவின் சொத்து கிடைக்காது. இதனால் தான் ஜெயாவை கொலை செய்ய திட்டமிட்டு, எத்திராஜ், சரவணனுக்கு ரூ.10,000 கூலி கொடுத்து கொலை செய்யும்படி சொன்னேன். ஜெயாவுக்கு சமீபத்தில்தான் ஆப்ரேஷன் நடந்தது. அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறி வழக்கை திசைத்திருப்பி விடலாம் என்று எண்ணினேன் என்றார்.