சென்னை, ஆக.14: வளசரவாக்கத்தில் உள்ள ஹோமியோ மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகைகள் திருடப்பட்டதாக அளித்த புகாரில் சந்தேகநிலை நிலவிவருவதையடுத்து, புகாரின் உண்மை தன்மையை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் டாக்டர் தங்கதுரை (வயது 57). இவர், அதே பகுதியில் ஹோமியோ கிளினிக் வைத்து நடத்திவருகிறார். இவர், மதுரையிலும் ஒரு கிளினிக் வைத்து நடத்திவருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை வளசரவாக்க்ம போலீசில் இவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் மதுரை வீட்டிற்கு சென்றுவிட்டு, சென்னை வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைத்து அலமாரியில் வைத்திருந்த 150 சவரன் நகை கொள்ளைப்போய் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில், போலீசாரும் சம்பவ இடம் சென்று ஆய்வுசெய்தபோது, அதில் குடியிருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாததையடுத்து போலீசாருக்கு மருத்துவர் மீது சந்தேகம் திரும்பியதாக கூறப்படுகிறது. வீட்டில் தண்ணீர் குழாய் உடைந்து, எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருக்கும் நிலையில் நகைகளை மட்டும் அலமாரியில் வைத்தது ஏன்? என போலீஸ் தரப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இது குறித்து, அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, கடந்த 6 மாதங்களாக தங்கதுரை சென்னை வீட்டில் இல்லை என்றும் வீடு பூட்டப்பட்ட நிலையிலேயேதான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தங்கதுரை தனது மகனை வைத்து திரைப்படம் எடுத்துவருவதாகவும், அதில் ஏற்பட்ட கடன் பிரச்சனையை ஈடுக்கட்ட இவ்வாறான பொய் புகார் அளித்துள்ளாரா? அல்லது உண்மையாகவே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.