புதுடெல்லி, ஆக.14: பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனுக்கு சுதந்திர தின விழாவில் ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட உள்ளது.

சென்னையை சேர்ந்த அபிநந்தன் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ஆயுதப்படை போலீசார் 40 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமான படையின் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஜெய்சி முகமது தீவிரவாதிகளின் முகாம்களை வெற்றிகரமாக அளித்து விட்டு திரும்பியது. மறுநாள் பாகிஸ்தானின் போர்விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. அப்போது போர் விமானி அபிநந்தன் மிக்-21 விமானத்தில் சென்று பாகிஸ்தானின் எப்.16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

இந்திய எல்லைக்குள் திரும்பும் சமயத்தில் பாகிஸ்தானின் தாக்குதலில் இவரது விமானம் சிக்கியது. பாராசூட்டில் இருந்து குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி கொண்டார். உள்ளூர் மக்கள் தாக்கியதில் அவரது விலா எழும்பு பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டார். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர் மேற்கு பிராந்திய விமானப்படையில் சேர்ந்தார். 36 வயதான அபிநந்தனின் வீரச்செயலை பாராட்டி அவருக்கு நாளை டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் போது வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.