மெட்ரோவுடன் பேருந்து எம்ஆர்டிஎஸ் இணைப்பு

சென்னை

சென்னை, ஆக.14: மெட்ரோ ரெயில் இரண்டாவது திட்டத்தின் கீழ் 28 இடங்களில் பிற போக்குவரத்திற்கு மாறும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. மெட்ரோவில் இருந்து எம்ஆர்டிஎஸ் மின்சார ரெயில், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிக்கு செல்வதற்கான இணைப்புகள் உறுவாக்கப்பட உள்ளன.

சென்னை மெட்ரோ இரண்டாவது கட்டத்திட்டம் 118.9 கி.மீ. தொலைவிற்கு மூன்று கொரிடார்களாக போடப்பட உள்ளது. 52 கி.மீ. தொலைவுக்கான பணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 2024-25 நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், 11 ரெயில் நிலையங்களில் மாநகர போக்குவத்து பேருந்துகளுக்கு மாறிச்செல்லும் இடமும், பிற இடங்களில் எம்ஆர்டிஎஸ் மற்றும் புறநகர் மின்சார ரெயில்களுக்கு மாறிச்செல்லும் இடங்களும் அமைக்கப்படும் என்றனர்.

மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையிலான வழித்தடத்தில் பயணிகள் பெரம்பூர், சேத்துப்பட்டு அல்லது பசுமை வழிச்சாலை நிலையம், திருவான்மீயூர் எம்ஆர்டிஎஸ் மற்றும் அயனாவரம் பஸ் டிப்போ அல்லது மந்தவெளி அடையாறு பஸ் டிப்போக்கள் அல்லது மெட்ரோ ரெயிலுக்கு மாறிச்செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

இந்த இடங்களில் சுரங்கப்பாதைகள் மற்றும் மேல்மட்ட பாதைகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரிக்கு எதிரே சிறிய அளவில் ரெயில் நிலையம் அமைத்து சுரங்கப்பாதை மூலம் இணைப்பு ஏற்படுத்தப்படும்.
திருமங்கலம் சுரங்க ரெயில் நிலையத்துடன் இணைப்பதற்காக 100 அடி சாலையில் மேல்மட்டப்பாதை அமைக்கப்படும். இதேபோல் ஆலந்தூரில் 40 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் அமைத்து இணைப்புகள் உண்டாக்கப்படும்.

கலங்கரை விளக்கத்திற்கும் பூந்தமல்லிக்கு இடையிலான வழித்தடத்தில் நந்தனம் மற்றும் வடபழனியில் மாறிச்செல்லும் இடங்கள் அமைக்கப்படும். இந்த இடங்களில் ஏற்கெனவே மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், நிலம் கையகப்படுத்துதலை குறைக்கும் வகையில் மேல்மட்ட பாதையில் அதிக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சுரங்கப்பாதைகளில் அமைக்கப்படும் ரெயில் நிலையங்களில் பரப்பளவு குறைக்கப்படும் என்றனர்.