திருச்சி, ஆக.14: காவிரியில் வெள்ளம் வந்தால் சமாளிக்க பொதுப்பணித்துறை 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளது என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் கூறினார்.
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் தண்ணீர் திறந்து விடப்படுவதால். நேற்று அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியது.

இந்நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன் நேற்று மாலை திருச்சி முக்கொம்புக்கு வந்து தற்காலிகமாக பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறுகையிலி. இன்னும் 4 நாட்களில் அங்கு “கான்கிரீட் அமைக்கும் பணி நிறைவடையும். காவிரியில் வெள்ளம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது.

கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது, பிலிகுண்டுவிற்கு வரும் நீரின் அளவு, மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு ஆகியவற்றை பொதுப்பணித்துறை துல்லியமாக கண்காணித்து வருகிறது.காவிரியில் வெள்ளம் வந்தாலும் அதனை சமாளிக்க பொதுப்பணித்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. எனவே விவசாயிகள் கவலைப்பட வேண்டியது இல்லை.

மேட்டூர் அணையில் இருந்து, முதல்-அமைச்சர் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டு உள்ளார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடந்து வந்தன. தண்ணீர் வந்து சேருவதற்குள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்து விடும்.

தண்ணீர் அதிக அளவில் வந்தாலும் கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அணைக்கு பாதிப்பு ஏற்படாது. வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் தான் பொதுப்பணித்துறை சார்பில் அளவீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றார்.