ப.சிதம்பரத்தை விமர்சிப்பதா? காங். கண்டனம்

சென்னை

சென்னை, ஆக.14: காஷ்மீர் மாநில உரிமை பறிப்பை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆற்றிய உரைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய பதிலை கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்து இருக்கிறார்.

இந்தியாவின் நிதி மந்திரியாக இருந்து 10 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து வரலாறு படைத்த பொருளாதார சீர்திருத்த செம்மலை பார்த்து, ‘இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டிற்கு இவரால் என்ன பயன்? இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன?’ என்று கடுமையாக பேசியிருக்கிறார்.

ஏழை, எளிய மாணவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடன் திட்டத்தை அறிவித்தவர். இதன் பயனாக 24 லட்சம் மாணவர்களுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இதில், ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

ப.சிதம்பரத்தின் பங்கை பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது. இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியதற்காக இந்தியாவின் சாதனைச்செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை விமர்சித்து இருப்பது சரியல்ல.