தஞ்சை, ஆக.14: காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் இன்று கல்லணைக்கு வந்து சேரும் என்றும், நாளை அங்கிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார். ஆரம்பத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் மாலையில் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

காவிரியில் வரும் தண்ணீரை பொறுத்து இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மேட்டூர் அணை தண்ணீர் கல்லணையை சென்றடைய 3 நாட்களாகும். அந்த வகையில் நாளை கல்லணைக்கு வரும் தண்ணீர் மறுநாள் சம்பா சாகுபடிக்கு திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கரூர், மாயனூர் தடுப்பணை வழியாக பவானியை வந்தடைந்தது.

கல்லணையில் இருந்து வரும் நீர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றிக்கு பிரித்து விடப்படும். கல்லணையில் காவிரி தண்ணீரை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணம், மயிலாடுதுறை வரை காவிரி நீர் சென்ற பிறகே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகார் வழியாக வங்க கடலுக்கு செல்லும்.

அந்த வகையில், காவிரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று 2.65 லட்சம் கன அடியில் இருந்து 2.05 லட்சம் கன அடியாக குறைந்து விட்டது என பென்னாகரம் தாசில்தார் ஜி.சதாசிவம் தெரிவித்துள்ளார். இதனிடையே சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக 309 விதைநெல் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.