பாக். படை குவிப்பிற்கு தலைமை தளபதி பதில்

இந்தியா

புதுடெல்லி, ஆக,14: ஜம்மு-காஷ்மீரையொட்டி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் கூடுதலாக படைகளைக் குவித்து வருவது கவலைக்குரிய விஷயம் அல்ல என்றும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என்றும் ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராணுவத் தளபதி விபின் ராவத் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளை அதிகரித்துள்ளதாக வந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து ராவத் கூறியது: அது இயல்பானதுதான். ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகளைக் குவிப்பதோடு, தளவாடங்களையும் எல்லைப் பகுதிக்கு நகர்த்துவது வழக்கம். அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
எல்லைப் பகுதியில் எந்த பாதுகாப்புச் சவாலையும் சமாளிக்க இந்தியப் படைகள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.