பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு 40 ஆயிரம் பேர் முன்பதிவு

உலகம்

வாஷிங்டன், ஆக.14: அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கும் இந்திய-அமெரிக்கர்கள் மாநாட்டில் பங்கேற்க 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் ஐ.நா.பொதுச் சபையின் 74-வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ம் தேதி காலை மோடி உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் செப்டம்பர் 22-ஆம் தேதி மோடி உரையாற்றவுள்ளார். மோடி பங்ஸற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை. எனினும், இலவச முன் அனுமதிச்சீட்டு பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். மோடி உரையாற்றவிருக்கும் நிகழ்ச்சியில் 50,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றனர்.