சென்னை, ஆக.14:
அடுத்த ஆண்டு முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர் க.சண்முகம் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார்.

விழாவில், நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், விஜய்ஆண்டனி, பிரியாமணி, சந்தானம், பொன்வண்ணன், சரவணன், இயக்குனர்கள் சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், பாடகர் உன்னி மேனன், மகாநதி சோபனா மற்றும் நாடக கலைஞர்கள் கர்நாடக இசை கலைஞர்கள், பத்திரிகையாளர் உள்ளிட்ட 200 கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசியதாவது:-பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த வகையில், இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கலைஞர் பெருமக்கள் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். இங்கே கலைமாமணி விருது வழங்குகின்றபொழுது இந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்கள். அதனை ஏற்று அ.தி.மு.க. அரசால் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

அதாவது, கலைமாமணி விருது 3 பவுனுக்கு பதிலாக இனி 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கங்களாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 பவுன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.