அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படம் தற்போது அஜித் நடிப்பில் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியானது. இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனிகபூர் தயாரித்துள்ளார்.

இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்த அஜித்தை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே பார்த்திபன் தன் ஸ்டைலில் வாழ்த்தினார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த படத்தை பார்த்து விட்டு அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனதார பாராட்டி உள்ளார். இது போன்ற கதைகளில் உங்களை போன்றவர்கள் நடித்ததால் பெரிய அளவில் படம் பேசப்பட்டு விட்டதாக ரஜினி கூறியுள்ளார்.

இதேபோல் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து அஜித்திற்கு மலர் கொத்து ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதோடு வாழ்த்து மடலையும் அனுப்பி உள்ளனர். இவர்களை தவிர இயக்குனர் விக்னேஷ் சிவனும் படத்தை பார்த்து விட்டு அஜித்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.