சென்னை, ஆக.14: பயங்கர ஆயுதங்களுடன் வந்த முகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடி அவர்களை விரட்டி அடித்த கடையத்தைச் சேர்ந்த வீரத் தம்பதிக்கு தமிழக அரசின் வீரச் செயல்களுக்கான விருது நாளை முதல்வர் கரத்தால் வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செந்தாமரை (65).
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் சண்முகவேல் வீட்டு வராண்டாவில் அமர்ந்து செல்போனில் மகனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய கழுத்தை பின்பக்கத்திலிருந்து துண்டைப்போட்டு ஒரு கொள்ளையன் இறுக்க முயன்றான். மற்றொரு கொள்ளையனும் வரவே கணவனின் சத்தத்தைக் கேட்டு அவருடைய மனைவி ஓடிவந்தார்.

இருவரும் தங்களுக்கு கிடைத்த பொருட்களை வைத்து போராடி கொள்ளையர்களை விரட்டி அடித்தனர்.

இந்த சம்பவம் வைரலாக பரவி உள்ளது. இந்த நிலையில், வீரத்தம்பதிகளின் துணிச்சலை பாராட்டும் வகையில் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விருது வழங்குகிறார்.

இதற்காக அவர்கள் இருவரும் இன்று விமானம் மூலம் சென்னைக்கு பயணமானார்கள். பகல் 2.30 மணிக்கு அவர்கள் சென்னை வருகிறார்கள். அரசின் சார்பில் அதிகாரிகள் அவர்களை வரவேற்று அழைத்து செல்கிறார்கள்.