பெங்களூரு, ஆக.14: சந்திரயான்-2 இன்று அதிகாலையில் பூமி வட்டப்பாதையைவிட்டு வெளியேறி, நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கியது. வரும் 20-ம் தேதி நிலவு பூவி வட்டப்பாதையை அடைந்து செப்டம்பர் 7-ல் நிலவில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது.

அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

இவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற நிலையில், இன்று அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டது. இதற்காக சந்திரயானில் உள்ள திரவ எஞ்சின் 1203 நொடிகள் இயக்கப்பட்டது. இதையடுத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையைவிட்டு சந்திராயன்-2 வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. பின்னர் நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.

இது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ள சந்திரயான்-2, இன்னும் 6 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன்பின் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயானில் இருந்து பிரியும் லேண்டர் வாகனம் நிலவில் தென் பகுதியில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.