காஞ்சிபுரம், ஆக.14: ஆதி அத்திவரதரை மீண்டும் அனந்த சரஸ் திருக்குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி ஆதி அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து வரப்பட்டது.

ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டுள்ள அத்தி வரதர், வரும் 17-ம் தேதி அன்று மீண்டும் அனந்த சரஸ் திருக்குளத்துக்குள் வைக்கப்பட உள்ளார். இதற்காக குளத்தை தயார் செய்யும் பணியில் எல் அண்டு டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. திருக்குள மண்டபத்துக்கு அடியில் உள்ள தொட்டியில் அத்தி வரதர் வைக்கப்பட உள்ளார்.

அந்தத் தொட்டியில் நாகர், கிருஷ்ணர் சிலைகள் உள்ளன. ஐந்து படிக்கட்டுகளும் இந்தத் தொட்டியில் உள்ளது. அத்தி வரதரை வெளியில் எடுக்கும் போது திருக்குளத்தில் இருந்த தண்ணீர் மோட்டார் மூலம் இறைக்கப்பட்டு பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றப்பட்டது. 17-ம் தேதி அத்திவரதரை குளத்துக்குள் மீண்டும் வைத்த பிறகு தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. ஆனால் கடந்த 1979-ம் ஆண்டில் அத்தி வரதர் குளத்துக்குள் வைக்கப்பட்ட போது கடும் மழையால் குளம் தானாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.