காஞ்சிபுரம், ஆக. 14: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று நேற்று நள்ளிரவு தரிசனம் செய்தார். வரதராஜபெருமாள்கோயிலில் உள்ள வசந்தமண்டபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம்செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று நள்ளிரவில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். விவிஐபி நுழைவு வாயிலில் மாவட்டம் நிர்வாகம்சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து நேராக வசந்த மண்டபத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்று அத்திவரதர் சன்னதி முன்பு அமரவைக்கப்பட்டு சங்கல்பம் செய்யப்பட்டது.

பின்னர் பெருமாளுக்கு ஆலய பட்டாச்சார்யார்கள் அர்ச்சனை செய்து ரஜினிக்காந்துக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர். சுமார் 20 நிமிடங்கள்அங்கிருந்த ரஜினிகாந்த் அத்திவரதரை மனமுருக பிரார்த்தனை செய்தார். அவர்களுடன் லதாவின் உறவினர்களும் தரிசனம் செய்தனர்.