புதுடெல்லி ஆக.15: சுதந்திர தினவிழா உரையில் நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறள் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்.

73-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீர் பிரச்னையை தீர்க்க ‘ஜல் ஜீவன்’ என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி, திருவள்ளுவர் கூறியது போல், ‘நீரின்றி அமையாது உலகு’. 70 வருடங்களில் மத்திய அரசு செய்யாததை இந்த அரசு 4 ஆண்டுகளில் செயல்படுத்தும். விவசாயம், குடிநீர் திட்டங்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவை கருத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது. தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே சமண முனிவர் ஒருவர் கூறியுள்ளார். அவரது வாக்கு இப்போது பலித்துக் கொண்டிருக்கிறது என்றார்.