புதுடெல்லி, ஆக.15: முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். பாதுகாப்புத்துறையிலும் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் வெளியிட்டார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார். பின்னர் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மோடி தனது உரையில் கூறியது வருமாறு:-

இந்தியாவின் முப்படைகளுக்கு இனி ஒரே தலைமை தளபதி நியமிக்கப்படுவார். முப்படைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், முக்கிய முடிவுகளை தாமதமின்றி எடுக்கவும் இது உதவும். 1999-ல் கார்கில் சண்டையில் இந்தியா வெற்றியடைந்த பிறகு அமைக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடையில்லா வளர்ச்சிப்பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம். வளர்ச்சிக்கு இருந்த தடைகளை கடந்த 10 வாரங்களில் நாங்கள் நீக்கியிருக்கிறோம்.

காஷ்மீர் விவகாரம், முத்தலாக் தடை ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக குறிப்பிடலாம். நாட்டின் சில பகுதிகள் கன மழையால் தவித்துக் கொண்டிருக்கிறது. காலம், நேரம் பார்க்காமல் மீட்புப்படையினர் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 2019-ல் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்திருக்கிறது. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் வைத்தோம்.

காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்துள்ளோம். கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை நாங்கள் 4 ஆண்டுகளில் செய்வோம். விவசாயம், தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திரதினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட்டிருக்கும். ஒன்றிணைந்த நாடான இந்தியாவிற்கு ஒரே தேர்தல் பொருத்தமானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்

தமிழில் பேசிய மோடி

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், ‘நீரின்றி அமையாது உலகு’ என்று தமிழில் கூறி திருக்குறளை மேற்கோள் காட்டினார்.