சென்னை, ஆக.15:தமிழ் புத்தாண்டில் புதிய கட்சி ஆரம் பிக்கப்படுமா என்பது குறித்து கேட்ட போது பொறுத்திருந்து பாருங்கள் என்று ரஜினி பதில் அளித்தார். காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி ராஜதந்திரத்துடன் அணுகி இருப்பதையே தாம் பாராட்டியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்ப்படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாதது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. இது குறித்து, தேசிய விருது தேர்வுக் குழுவில் உள்ள நடுவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். காஷ்மீர் விஷயத்தை பிஜேபி சிறப்பாக கையாண்டதால் கிருஷ்ணர், அர்ஜுனன் என்று உதாரணமாகக் கூறினேன். அதாவது ஒருவர் திட்டமிடுபவர். இன்னொருவர் அதை செயலாற்றுபவர் என்று அர்த்தம். காஷ்மீர் விஷயம் எவ்வளவு பெரிய விஷயம். அது இந்த நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் ஒரு தாய்வீடாக உள்ளது. இந்தியாவுக்குள் அவர்கள் ஊடுருவ கேட்வே ஆஃப் இந்தியா மாதிரி காஷ்மீர் உள்ளது. அதை நமது கைப்பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒரு ராஜதந்திரமாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சித்திரை 1-ல் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறினீர்களே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அதை நான் சொல்கிறேன். அது எப்போது என்று கண்டிப்பாக உங்களை எல்லாம் அழைக்காமல், சொல்லாமல் இருக்க மாட்டேன். பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.