காஞ்சிபுரம், ஆக.16: காஞ்சியில் கடந்த 47 நாட்களாக காட்சிதந்த அத்தி வரதரின் தரிசனம் இன்று நிறைவு பெறுகிறது. இதுவரை 1,10 கோடி பேர் அவரை தரிசித்துள்ளனர்.

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு இறுதி நாளான இன்று 6 லட்சம் பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்அனந்த சரஸ் குளத்திலிருந்து எழுந்தருளிய ஸ்ரீ ஆதி அத்திவரதர் ஜூலை 1-ந் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்திலும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் நின்றகோலத்திலும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

அத்தி வரதரின் விஐபி தரிசனம் நேற்று 2 மணியுடன் நிறைவு பெற்றது.நேற்று ஆடி கருட சேவை என்பதால் மாலை 4 மணி முதல் 8 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் பொது தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்தின் 47-ம் நாளான இன்று, ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை அணிந்துகாட்சி அளிக்கிறார். இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 6 மணி நேம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நள்ளிரவையும் தாண்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

காஞ்சி நகரம் முழுவதும் ‘வரதா வரதா, பெருமாளே’ என்ற பக்தி கோஷங்கள் எதிரொலித்த வண்ணம் உள்ளது.

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காஞ்சியில் குவிந்துள்ளதால் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தடுப்புகளை ஏற்படுத்தி தரிசனத்துக்கு வழிவகை செய்துள்ளனர்.

அத்திவரதரை காண இனி 40ஆண்டுகள் ஆகும் என்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 6 லட்சம் பக்தர்கள் காஞ்சி நகரில் குவிந்துள்ளனர். கடந்த 46 நாட்களில் 1 கோடியே 10 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளான சனிக்கிழமையான நாளை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில்ஆதி அத்திவரதர் மீண்டும் எழுந்தருள உள்ளார்.