காஞ்சிபுரம், ஆக.17: ஜூலை 1-ம் தேதி தொடங்கி இன்று வரை 48 நாட்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் இனி ‘அனந்த சரஸ்’ குளத்தில் எழுந்தருளுகிறார்.
ஜூன் 29-ம் தேதி இரவு அனந்த சரஸ் குளத்திலிருந்து வெளிவந்த அத்தி வரதர், இன்று மீண்டும் அந்த குளத்திற்கே சென்று அங்கிருந்து அருள்பாலிப்பார்.

ஜூலை 1-ம் தேதி வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்க தொடங்கினார். ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் என்று இருந்த பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. சில ஆயிரம் என்பது லட்சமாக மாறியது. பிறகு ஒரே நாளில் நான்கு லட்சம், ஐந்து லட்சம் என்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சி மாநகரில் குவிந்தனர்.

நமது நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்தனர். கடைசி சில நாட்களில் 4 முதல் 6 லட்சம் பக்தர்கள் கூட்டம் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது.
கொளுத்தும் வெயில், கொட்டும் மழை எதுவுமே பக்தர்களின் மன உறுதியை அசைக்க முடியவில்லை. வாகனப் போக்குவரத்து இன்றி பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் அவர்கள் மனம் தளரவில்லை. குறிப்பாக வயதானவர்கள், நோயாளிகள் கூட அத்திவரதரை தரிசிப்பதற்காக பக்திப் பரவசத்தோடு வந்தனர்.

குடிக்க தண்ணீர் போதிய அளவில் கிடைக்கவில்லை, உணவு இல்லை என்றாலும் அவர்களின் ஆர்வம் குறையவில்லை. 47 நாட்களில் ஒரு கோடியே 15 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்திருக்கிறார்கள். திருப்பதியை விட அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழிந்த அதிசயத்தை பலரும் பார்த்து வியந்தனர்.

கடைசி நாளான நேற்றும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், பொது தரிசனம் மட்டுமே இருந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியோடு அத்திவரதரை கண்டு தரிசித்தனர்.

அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளுவதற்கு முன்னதாக மழை பெய்யும் என்ற நம்பிக்கை நேற்றும் பொய்க்கவில்லை. வானமே பொத்துக் கொண்டு ஊற்றுவது போல பலத்த மழை பெய்தது. மழையில் நனைந்தபடியே பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்தனர். நேற்று நள்ளிரவு 2 மணி வரை தரிசனம் நடைபெற்றது. அத்திவரதருக்கு ஆராதனை செய்த பின்னர் வசந்த மண்டப கதவுகள் மூடப்பட்டன.

இன்று சுப்ரபாதப் பாடலுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க அத்திவரதர் இன்று காலை எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நிவேதனங்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டன.

வெட்டிவேர், பச்சை கற்பூரம் உள்ளிட்டவைகள் சேர்த்து தைலக்காப்பு அணிவிக்கப்பட்டு, புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.

முன்னதாக மாலை 4 மணி அளவில் மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் தேவராஜசுவாமி வசந்த மண்டபம் வருகிறார். அங்கு அத்திவரதரை தரிசிக்கும் சம்பிரதாய நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்து தொடர்ந்து தேவராஜசுவாமி மீண்டும் சன்னதிக்கு திரும்புவார். அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு மண்டபத்தில் இருந்து அத்தி வரதர் அனந்த சரஸ் குளத்திற்கு புறப்படுகிறார்.

அங்கு அத்தி வரதர் எழுந்தருளுகிறார். மேற்கு திசையில் தலையும், கிழக்கு திசையில் பாதமும் இருக்கும் படி சயனக் கோலத்தில் அத்தி வரதர் நிறுவப்படுவார். பேழை எதுவும் இல்லாமல் அத்திவரதர் மட்டுமே வைக்கப்படுவார். தண்ணீரில் மிதக்காமல் இருக்க சிலை மீது நாக வடிவிலான கற்சிலைகள் வைக்கப்படும்.

அத்திவரதர் அங்கு எழுந்தருளிய பிறகு பொற்றாமரை குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து அனந்த சரஸ் குளத்தில் நிரப்பப்படும்.

கடந்த 47 நாட்கள் வைபவத்தின் போது காஞ்சி நகரம் முழுவதும் ‘கோவிந்தா, நமோ நாராயணா, வரதா, தேவாதிராஜா, பரப்பிரம்மா’ என்ற பக்தி கோஷங்கள் காஞ்சி மாநகரில் உணர்ச்சிப் பூர்வமாக ஒலித்தன. இதனால் ஒரு ஆன்மீகப் புரட்சியையே ஏற்பட்டுள்ளது எனச் சொல்லலாம்.