சென்னை, ஆக.17: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூரில் 17 செ.மீ அளவிற்கு மழை கொட்டியதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆராய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூர், அயனாவரம், ராமாபுரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை நீடித்து வருகிறது.

அதுபோன்று புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் அதிக பட்சமாக 17 செ.மீ, கடலூரில் 13 செ.மீ, போளூரில் 11 செ.மீ மழை பெய்திருக்கிறது. வேலூரில் சிஎம்சி  மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீடித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் கன மழை காரணமாக கோவில் பரையனூர் கிராமத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு மாணவன் சிவபிரகாசம் உயிரிழந்தான்.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.