தஞ்சை, ஆக.17: கல்லணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 6 அமைச்சர்கள்,3 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

கல்லணை தண்ணீர் கொள்ளிடம், காவிரி மற்றும் வெண்ணாற்றில் தலா 1000 கன அடியும், கல்லணை கால்வாயில் 500 கன அடியும் சீறிப்பாய்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதை தொடர்ந்து கடந்த 13-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையை திறந்து வைத்தார். ஆரம்பத்தில் வினாடிக்கு 3000 கன அடியும், பின்னர் படிப்படியாக 10000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மாயனூர் கதவணை வழியாக நேற்று திருச்சி முக்கொம்பை அடைந்தது. அங்கிருந்து நேற்று மாலை தஞ்சை கல்லணையை அடைந்தது. இன்று காலை 11.15 மணிக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் பிரித்து விடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ். மணியன். விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்பி, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், திருவாரூர் கலெக்டர் அனந்த், நாகை கலெக்டர் சுரேஷ், திருச்சி கலெக்டர் சிவராஜ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், திருவெற்றி செல்வம், முதன்மை பொறியாளர் டி.ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கல்லணை தண்ணீரில் மலர்களை தூவி திறந்து விட்டனர். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்ட எல்லையோரத்தில் உள்ள சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் இதன் மூலம் பாசனவசதி பெறும் என்றும் ஏற்கனவே ஆழ்துளை கிணறுகள் மூலம் 1.09 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரும் இதன் மூலம் பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கூட்டாக அமைச்சர்கள் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கடைமடை வரை தண்ணீர் செல்லும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 112 கன அடியாக இருந்தது. கர்நாடகத்தில் மழை ஓய்ந்திருப்பதால் அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.