சென்னை, ஏப்.11:தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், வாக்குச்சாவடிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது குற்றம் என்பதை விளக்கி விளம்பரப்பலகை வைக்கக் கோரியும் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கை போதுமானது என்பதால் உத்தரவிட தேவையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவில், பூந்தமல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர், தமிழக அரசு அறிவித்த 2000 ரூபாய் பணம் தேர்தலுக்கு பின்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டுவதற்கு சமமாகும்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குகளை பெற வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம் வழங்குவது தேர்தல் நடைமுறையை கேலிக்கூத்தாகிவிடும். தமிழகம் முழுவதும் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் பணமாக வழங்குகின்றனர். இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விளம்பர பலகைகள் வைக்க ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, இதேபோன்ற கோரிக்கைகளுடன் கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கும், பணப்பட்டுவாடா குறித்த புகார்களில் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம்.

மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். துண்டறிக்கைகள் வழங்கி வருகிறோம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.