காஞ்சிபுரம், ஆக.18: ஆதி அத்திவரதர் நேற்றிரவு அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளியதை அடுத்து காஞ்சிபுரத்தில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அனந்த சரஸ் குளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்து ஆதி அத்திவரதருக்கு நேற்று பூஜைகள் செய்யப்பட்டு மாலை 4 மணியளவில் 48 வகையான நைவேத்தியங்களை பட்டாச்சாரியார்கள் படைத்தனர். கற்பூர தீபாராதனைக்கு பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அத்திவரதரை காண வசந்த மண்டபத்துக்கு வந்தார்.

அப்போது வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தந்து விடை கொடுத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா, வரதா’ என பக்தி கோஷங்களை எழுப்பினர். பிறகு அத்திவரதருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வெண் பட்டு அணிவிக்கப்பட்டு, வசந்த மண்டபத்தில் இருந்து கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் சயன கோலத்தில் அத்தி வரதர் எழுந்தருளினார்.

அந்த நேரத்தில் காஞ்சி நகரம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இன்றும் மழை நீடித்து வருவதால் அனந்த சரஸ் குளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. பொற்றாமரை குளத்தில் இருந்தும் தண்ணீர் விடப்படுகிறது.

அனந்த சரஸ் குளத்தைச்சுற்றி உயரமான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள நீராழி மண்டபத்தை வழிபடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் இன்று பக்தர்கள் வரதராஜபெருமாள் கோயிலுக்கு சென்று மூலவரை தரிசிக்க தொடங்கினார்கள்.