சென்னை, ஆக.18: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலையும், நுகர்வோர் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதாக முதல்வர எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிற மாநிலங்களை விட உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாட்டில் தான் அதிக விலை வழங்கப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் கூறியதாவது:- 4.6 லட்சம் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி இருக்கிறோம். இதன் அடிப்படையில் நுகர்வோருக்கும் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். பசும் தீவனம் உள்ளிட்ட பிற செலவுகள் அதிகரித்து இருப்பதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது.

மேலும் ஐந்து ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வருமானம் அதிகரித்து இருக்கிறது. சம்பளமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியதை கொடுத்து தான் ஆக வேண்டும். எனவே நுகர்வோருக்கு இந்த லேசான விலை உயர்வு என்பது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் சமச்சீரான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இருப்பினும் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலை கொடுத்து வருகிறோம். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக ஊக்கத் தொகை கொடுப்பதாக கூறுகிறீர்கள். இது தவறான தகவல். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை கொடுத்து வருகிறோம் என்றார்.

மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருப்பது பற்றி கேட்டதற்கு, மழை பொழிவை பொறுத்து தண்ணீர் திறப்பதும் அதிகரிக்கப்படும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்களில் கன மழை பெய்து வருவது தொடர்பாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு ஏற்கனவே ஆணை பிறப்பித்து இருக்கிறோம். டெல்டா மாவட்டங்களிலும் தற்போது நல்ல மழை பெய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து வெளிப்படையான கருத்து தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த போது, நீங்கள் கூறுவது தவறு, இந்த விஷயத்தில் அரசு ஒளிவு மறைவு இல்லாமல் கருத்து கேட்டு வருகிறது. தமிழகம் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக இருந்து வருகிறது. இரு மொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றார்.

அனைத்து மாவட்டங்களும் பிரிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, நீங்கள் ஏதாவது கேட்டிருப்பீர்கள், அதற்கு அவர் பதிலளித்து இருப்பார். பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தால் அதை பரிசீலித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.