சென்னை, ஆக.18: சென்னையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று இரவு சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இந்த மழை நாளையும் தொடர்ந்து பெய்யும் என்றார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு மழை தண்ணீர் வரவில்லை. மழை தண்ணீரை காய்ந்த தரை பகுதியே ஈர்த்துவிட்டது. ஏரி பகுதிகளில் 98 மி.மீட்டர் அளவுக்கே மழை பெய்திருப்பதால் ஏரிகளில் ஈரப்பதம் மட்டுமே உள்ளது. ஆங்காங்கே திட்டு திட்டாக மழை தண்ணீர் தேங்கி உள்ளது. இன்னும் 4 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் தான் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.