டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி காமிரா பொருத்தம்

தமிழ்நாடு

நாமக்கல்,ஆக.18: தமிழகத்தில் 5,200 டாஸ்மாக் விற்பனை நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும், வேலையும் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இனி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாதபடி மொத்தமுள்ள 5,200 டாஸ்மாக் கடைகளிலும், விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் கூறினார்.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கனமழை காரணமாக 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின் வினியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை உள்ளிட்ட இடங்களில் 460 மெகாவாட்நீர் மின் உற்பத்தி நடைபெறுவதால், அனல் மின்நிலையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.