மேட்டூர், ஆக.19: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27,000 கனஅடியில் இருந்து 33 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா, கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால்,

காவிரியில் நீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. சுமார் 5 தினங்களில் 50 அடியிலிருந்து 100 அடியை நீர்மட்டம் தொட்டது.

இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

பின்னர் படிப்படியாக நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் 27,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது நீர் மட்டம் 114.05 அடியாக உள்ள நிலையில், அணை முழுகொள்ளளவை விரைவில் எட்ட உள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.