கோவை, ஆக.19: இன்னும் 50 முதல் 60 வருடங்களில் சந்திரனும், செவ்வாயும் மனிதர்கள் வாழும் பகுதியாக மாறும் என்று இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் மத்திய அரசின் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாத்துரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று மத்திய அரசின் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற 3 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘சந்திராயன் 2 நிலவை எட்டும் நாளான செப்டம்பர் 7-ம் தேதியை உலகமே எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவின் 130-கோடி மக்களும், நிலவிற்கு திரும்பவும் செல்ல வேண்டும் என்று நினைக்கும் பிற நாடுகளும் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நிலவை அடைவது தொழில்நுட்ப ரீதியாக சவாலான காரியமாக இருந்தாலும், அனைத்து சோதனைகளும் முடிவடைந்துள்ளது. சந்திராயன் நிலவில் இறங்கும் அந்த 15 நிமிடத்திற்காக காத்திருக்கிறோம் என்றார்.

மேலும் நிலவும் செவ்வாயும் பூமியின் இன்னொரு தளமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த அவர் அமெரிக்க கண்டத்தில் மனிதர்கள் குடியேறியது போல, நிலவும் செவ்வாயும் மனிதர்கள் வாழும் ஒரு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கு இன்னும் 50 முதல் 60 வருடங்கள் வரை ஆகலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.