சென்னை, ஆக.19: புழல் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, போலீஸ்காரரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அடுத்த புத்தகரம் திருமால் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது 39). இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியில் இருந்தார்.

இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருணம் நடந்துள்ளது. இவர்களுக்கு வருண் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், மகன் வருண் நேற்று மாலை நடன வகுப்புக்கு சென்றதாக கூறப்படுகிறது. கணவன், மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, இரவு 9 மணியளவில் கணவன்- மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த போலீஸ்காரர் நரேஷ் மனைவி ஜெயாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளா£ர். பின்னர், மனைவியின் துப்பாட்டாவாலேயே மின்விசிறியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், மாதவரம் துணை கமிஷனர் ரவளபிரியா, புழல் கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தங்கதுரை உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று, இருவரின் உடல்களையும் கைப்பற்றினர்.

பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரிடையே நிலவிவந்த குடும்ப பிரச்சனை காரணமாக இவ்வாறான விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

போலீஸ்காரர் ஒருவரே தனது மனைவியை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.