சேலம், ஆக.19: முதலமைச்சரின் குறை தீர்க்கும் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதன் மூலம் அதிகாரிளே மக்களைத் தேடிச்சென்று அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.

நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று மக்களின் குறைகளைத் தீர்க்கும் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் துவக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் தெரிவித்திருந்தார். அத்திட்டத்தின் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம் நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் இன்று நடைபெற்றது.

அப்போது முதல்வர் கூறியதாவது:- தமிழகத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களின் குறைகளை விரைவாக தீர்ப்பதற்காக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதன் திட்ட துவக்க விழாவை எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலே துவக்கியிருக்கின்ற ஒரு உன்னதமான நாள்.

உங்களுடைய மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும் என்பதையும், மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் தற்போது நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த குறைதீர் முகாம்களில் பட்டா மாற்றம், சமூகப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம், அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள்.

இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கு
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட மனுக்களின் மீதான தீர்விற்குப் பின், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர் பெருமக்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்களும் நடத்தப்படும்.

பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின் போது தீர்வு காணப்படும்.

மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான திட்டமாக திகழும் இந்த சிறப்புத் திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் ரூபாய் 76 இலட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களை நேரிடையாக சந்திக்கவுள்ளார்கள். முதலமைச்சர் என்ற முறையில் 234 தொகுதிகளில் இருக்கின்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இருந்தாலும், அவ்வப்போது எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு வந்து, மக்களை சந்தித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றோம், முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழா காண்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றேன். ஆகவே, நான் எங்கே சென்றாலும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் எப்பொழுதும் தனி கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.