சென்னை, ஆக.19: நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி ரமாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். எம்.எம்.சுந்தரேஷ், ஜி.கே.இளந்திரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் பேசியதாவது:- மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஆகும். இதன் கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னையில் 126 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன.

நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காக குடியிருப்புகள் கட்டுதல் போன்ற நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

2011-12 முதல் 2018-19ஆம் ஆண்டுகள் வரை 456 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19ஆம் ஆண்டில் இந்தஅரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 2018-19ஆம் ஆண்டில், 101 கோடியே 89 லட்சம் ரூபாய் அரசால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்திற்காக 1 ஆயிரத்து 265 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும்போது இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநலநிதி 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 4 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 220 உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2018-19ஆம் ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன.