புதுடெல்லி, ஆக.20:  பயிற்சி முகாமின்போது, தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் அனுமதியின்றி வெளியே சென்ற வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 3 பேருக்கு விளக்கம் கேட்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

லக்னோவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற 45 மல்யுத்த வீராங்கனைகளில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், சீமா பிஸ்லா மற்றும் கிரண் உள்ளிட்ட 25 பேர் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் அனுமதியின்றி வெளியே சென்றதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவலறிந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, இவர்கள் அனைவரையும் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றி உத்தரவிட்டுள்ளது. இவர்களில், குறிப்பாக சாக்ஷி மாலிக், சீமா பிஸ்லா, கிரண் ஆகியோருக்கு மட்டும் விளக்கம் கேட்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், நோட்டீஸ் பெற்ற மூவரும், ரக்ஷா பந்தன் விழாவில் கலந்து கொள்வதற்காக தங்களது வீட்டுக்கு சென்றிருந்ததாகவும், முன்அனுமதி பெறாமல் சென்றது தவறுதான் என மன்னிப்பு கடிதம் வழங்கியதையடுத்து, அவர்கள் 3 பேரும் தேசிய பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.