சென்னை , ஆக.20: பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கேட்டு, நளினி தாக்கல் செய்த மனு குறித்து வரும் வியாழக்கிழமை பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகள் திருமணத்துக்காக ஆறு மாதம் பரோல் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5 ம் தேதி உத்தரவிட்டது. ஜூலை 27 முதல் ஒரு மாதம் பரோலில் நளினி விடுவிக்கப்பட்டார். இந்த பரோல் முடியும் நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி ஆகஸ்ட் 8ம் தேதி தமிழக அரசுக்கு நளினி கொடுத்த கோரிக்கை மனுவானது சென்ற 13ம் தேதி நிராகரிக்கப்பட்டது. மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரிய தனது மனுவை பரிசீலிக்க கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வானது, வரும் வியாழக்கிழமை பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.