சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து ‘சங்கத் தமிழன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மற்றொரு நாயகியான நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் நகைச்சுவை நடிகர் சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வீரம், ஜில்லா ஆகிய படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சந்தர், விஜய் சேதுபதி, ராக்ஷ்சி கண்ணா ஆகியோர் ஒன்றாக செல்பி எடுத்துக்கொண்டு படப்பிடிப்பை நிறைவு செய்தனர். அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் இந்த படத்தின் டப்பிங் பணி தொடங்கியது. விஜய்சேதுபதி டப்பிங் பேசி வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் ஆகி 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் முதல் வாரம் இப்படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.