புதுடெல்லி, ஆக.21: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ஆஜராகுமாறு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன¢ அளிக்க மறுத்து புதுடெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு இப்பிரச்சனை சென்றுள்ளது. இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதி மன்றம் அவருடைய கோரிக்கையை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் புதுடெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் இல்லத்திற்கு சென்றார்கள். ஆனால் அவர் வீட்டில் இல்லை. முதலில் 6.30 மணிக்கும், பின்னர் 7.30 மணிக்கும் அதிகாரிகள் சென்ற போது ப.சிதம்பரம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். 3-வது முறையாக அவருடைய இல்லத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் ஒரு நோட்டீசை ஒட்டினார்கள்.

அதில் விசாரணைக்காக ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. 2 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று இரவு முழுவதும் சிதம்பரம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் அவரது முன்ஜாமீன் மனு வருவதாக இருந்தது. காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா முன்னிலையில் அவரது மனு விசாரணைக்கு வந்தது.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபல் கேட்டு கொண்டார். நள்ளிரவில் அவருடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக 2 மணி நேரம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இது குறித்து தலைமை நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன் என்று நீதிபதி ரமணா கூறினார். தலைமை நீதிபதி தலைமையில் அரசியல் சாசன பிரிவு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

அங்கு இப்பிரச்சனையை என்னால் எழுப்ப முடியாது என்று கபில்சிபல் கூறினார். இந்த மனுவை நான் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன். அவர் உணவு இடைவேளையில் இதனை எடுத்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று நீதிபதி ரமணா கூறினார். இதனை தொடர்ந்து கபில்சிபல் மற்றும் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அறைக்கு விரைந்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே பணப்பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் கிடைக்கவில்லை என்பதால் அவரை தேடும் நபராக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. விமான நிலையங்களில் இதற்கான நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனிடையே ப.சிதம்பரம் பதுங்கி இருப்பது எங்கே என்று சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர். சிதம்பரத்தின் வழக்கறிஞர் சிங்வி இடம் கேட்ட போது, வழக்கு சம்பந்தமாக விவாதிப்பதற்காக ப.சிதம்பரம் நேற்று பகலில் வந்தார். பின்னர் வேறு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது என்றும் சிங்வி கூறினார்.

கார் டிரைவரிடம் விசாரணை இதனிடையே ப.சிதம்பரத்தின் கார் டிரைவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். மாலையில் காரில் வந்த ப.சிதம்பரம் திடீரென்று பாதி வழியிலேயே இறங்கி விட்டதாக கார் டிரைவர் விசாரணையின் போது தெரிவித்திருக்கிறார்.

‘தப்பி ஓடவில்லை’
நான் தப்பி ஓடவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறேன். மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் முதல் குற்றப்பத்திரிக்கையில் என் பெயர் இடம் பெறவில்லை என்றும் சிதம்பரம் கூறி இருக்கிறார். முந்தைய காலத்தில் என் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்று அவர் அந்த மனுவில் இருக்கிறார்.

காங். தலைவர்கள் கூட்டம்
ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்கள¢இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.